ஒரு கனவு, ஒரு தற்கொலை

ஒரு கனவு, ஒரு தற்கொலை
Published on

அந்த சிறுவனுக்கு ஊசியென்றால் பயம். மருத்துவர் என்ன ஏது என  சோதிக்கும் போது,ஸ்டெத்தாஸ்கோப்பை   நெஞ்சில் வைத்து மூச்சை இழுத்து விடச்  சொல்லும் போதோ, டார்ச்லைட்டை அடித்துக் கொண்டு வாயைத் திறக்கச் செல்லும்போதோ சன்னமான குரலில் மருத்துவரிடம் ஒரு கோரிக்கையை முன் வைப்பான்: ‘எவ்வளவு கசப்பான மாத்திரையை வேணும்னாலும் சாப்பிடுறேன், ஆனா ஊசி மட்டும் வேண்டாம்.'

சன்னமான குரலில், கண்களில் நீர்முட்ட வைக்கப்படும் அந்த கோரிக்கை அநேக நேரங்களில் நிராகரிக்கப்படும். இத்தனைக்கும் அந்த மருத்துவர் சிறுவனின் ஒன்றுவிட்ட சித்தப்பா. ஒருமுறை மருத்துவரின் ஊசி பரிந்துரையுடன் செவிலியர் முன்பு உட்காரவைக்கப்பட்ட போது சிறுவனின் முகம் பயத்தில் வெளுத்திருந்தது. மருந்துசீட்டைப் பார்த்து செவிலியர், புட்டியைத் தேடி மருந்தை ஊசியில் ஏற்றும் நேரத்தில் சிறுவன் ஓடிவிட்டான். மருத்துவமனையைச் சார்ந்தவர்கள் எல்லாம்  சேர்ந்து அவனைத் துரத்திப்பிடித்து குண்டுகட்டாகத் தூக்கி வந்து ஊசி போட்டுவிட்டார்கள்.

அதன் பிறகு இந்த சம்பவம் குடும்பத்திலும் அந்த மருத்துவமனையிலும் பலமுறை பேசுபொருளாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

அவன்  எட்டு வயதில் டைபாய்டு நோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

முதல் ஐந்து நாட்களுக்கு எட்டு மணி நேரத்திற்கு ஒன்று என்ற ரீதியில் ஊசிகள் போடப்பட்டன. ஊசியின் மீதான பயம் மெல்ல மறைந்தது. மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் மருத்துவரான சித்தப்பாவின் ஆளுமை சிறுவனின் மனத்தை வசீகரித்தது. குணமாகிப் போகும் நோயாளிகளின் புகழ் வார்த்தைகளும், நோயாளிகள், உடன் வருபவர்கள் என்று பலரும் மருத்துவர்களுக்கு கொடுக்கும் மரியாதையைத் தொடர்ந்து பார்த்தபோது சிறுவனுக்கு அவர் அதீத சக்திகளுடைய, மனிதர்களை சாவின் விளிம்பிலிருந்து காக்கும் அசகாய சூரராகத் தெரிந்தார்.

அந்த அறியாத வயதில் அச்சிறுவன் மனதில் ‘நானும் டாக்டராவேன்' என்று சூளுரைத்துக் கொண்டான். இந்த ஆசை வேர்விட்டு மனதில் விருட்சமாக வளர்ந்தது.

சிறுவன் வளர்ந்தான், நண்பர்களும் அதிகமானார்கள். அவர்களில் சரிபாதிக்கும் மேல் மருத்துவப் படிப்பிற்கு முயற்சித்துக் கொண்டிருந்தவர்கள். அவர்களாகவே ஆசைப்பட்டவர்கள் வெகுச்சிலர். பெரும்பாலானவர்களின் குடும்பம் அவர்கள் மருத்துவராக வேண்டும் என்று ஆசையை மனதில் திணித்து விட்டிருந்தனர்.

சிறுவனின் மனதில் சினிமா மீதான காதல், வியாபாரம் செய்ய வேண்டுமென்ற ஆசை, எழுத்து மீதான ஈர்ப்பு, அரசியலின் பால் ஆர்வம் ஆகியன வந்துபோயின.

சிறுவனின் நெருங்கிய சினேகிதன் ஒருவனும் டாக்டராக முயற்சித்தான். இருவருக்கும் சேர்த்து நண்பனின் சித்தப்பா வேதியியல், உயிரியல் பாடங்கள் சொல்லிக் கொடுப்பார். நண்பனின் வீட்டில் மிகப்பெரிய நெருக்கடி அவனது அப்பா புகழ்பெற்ற இதய மருத்துவர். அக்கா மருத்துவர். அண்ணனும் மருத்துவத்திற்குப் படித்துக் கொண்டிருந்தான்.

1987-இல் மருத்துவப் படிப்பு கிடைக்காமல் போனவர்கள் பட்டியலில் இந்த இருவரும் உண்டு.

அந்த இருவர், நானும் எனது நண்பன் சாய் கோலப்பனும் தான். குடும்பத்தில் எங்களுக்கு மரியாதை குறைவாக இருந்த காலகட்டம் அது. இது கூட ஜீரணிக்கக் கூடியது தான். ஆனால் வீட்டிற்கு வரும் உறவினர்கள், தெரிந்தவர்களின் அட்வைஸ் அட்ராசிட்டிகள் தான் கொடூரமானவை. ‘இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாம்' ‘நுழைவுத்தேர்வுக்கு இன்னும் நல்லா உழைத்து தயார் செய்திருக்கலாம்.'

‘இன்னும் ரெண்டு கேள்விக்கு நல்லா பதிலளித்திருந்தால் வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கும்' என்று எத்தனையோ பேச்சுகளைக் கேட்டோம்.

நான் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பிஎஸ்சி சேர்ந்தேன். அடுத்த ஆண்டு முயற்சி செய்தேன். அப்போதும் மருத்துவப்படிப்பு கிடைக்கவில்லை. கால்நடை மருத்துவம் கிடைத்தது.

நண்பன் சாய் கோலப்பன் உயிரியலில் இளங்கலை, மருத்துவ நுண்ணுயிரியலில்  முதுகலை,  நுண்ணுயிரியலில் முனைவர் பட்டம் ஆகியவை பெற்று, அமெரிக்காவில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் பட்டத்துக்கு புற்றுநோய், காசநோய் ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்தான். தற்போது லூசியானா  பல்கலையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக உள்ளான்.

கனவு கைகூடாத போது விரக்தியின் விளிம்பில் நிற்கும் போது, சுற்றம் சூழ்ந்து ஏளனமாகப் பார்க்கும் போது, அல்லது அப்படிப் பார்ப்பவர்களை எதிர்கொள்ள திராணியற்று போகும் போது தற்கொலை எண்ணம் மனதில் துளிர்விடும்.

அரியலூர் அனிதாவில் தொடங்கி, விழுப்புரம் பிரதீபா, திருச்சி சுபஸ்ரீ, ஏஞ்சலின், ஹரிஷ்மா, மோனிஷா, வைஸ்யா, ரிது ஸ்ரீ, மோதிலால், ஜோதி ஸ்ரீ துர்கா, ஆதித்யா, விக்னேஷ், தனுஷ், கனிமொழி இப்படி நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்டதாக ஒவ்வொரு பெயரும் கண்ணில் படும்போது என் தூக்கம் தொலைந்து போகிறது.

எனக்கு மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைக்காமல் போன போது என்னிடம் நீண்ட நேரம் ஆறுதலாகப் பேசியவர் நண்பர் சாய் கோலப்பனின் சித்தப்பா பிரியத்திற்குரிய வேணுகோபால் அவர்கள்.

‘நானும் மெடிக்கல் சீட் கிடைக்காதவன் தான் மக்களுக்கு மருத்துவம் தொடர்பான சேவை வழங்குவதற்கு எத்தனையோ துறைகள் உள்ளன. எனக்கு எம்பிபிஎஸ் கிடைக்கவில்லை. பார்மசி படித்தேன்,' என்று தொடங்கி இப்படி தன்னை தோல்விக்குப் பின் எப்படி  தயார் செய்து கொண்டார் என்பது பற்றி நீண்ட உரையாடல்களை என்னுடன் நிகழ்த்தினார்.

‘மனிதர்களை குணப்படுத்தும் செயலைவிட,  வேறு எதன் மூலமாகவும் இறைவனுக்கு அருகில் செல்ல முடியாது,' (In nothing do men more nearly approach the gods, than in giving health to men) இவை மார்கஸ் டூலியஸ் சிசெரோ (கி.மு.106 - 43) வார்த்தைகள்.

‘மருத்துவக்கலை எங்கெல்லாம் நேசிக்கப்படுகிறதோ அங்கு மானுடமும் நேசிக்கப்படும்' என்பது ஹிப்போஹிரேட்டஸின் கூற்று.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் மருத்துவம் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. அதனால்  அதன் மீதான ஈர்ப்பு அதிகமாகிறது.

இந்தியாவின் படிப்பு தொடர்பான தோல்விகள் ஏளனமான ஒன்றாக கையாலாகத்தனமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றன.

‘நீட் தேர்வில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். நான் வாழத்தகுதியற்றவள். மிஸ் யூ அப்பா, அம்மா' என விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த மோனிஷா துண்டு சீட்டில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு மாணவன் தற்கொலை செய்துகொள்வதாக தேசிய  குற்ற ஆவணக்காப்பகம் கூறுகிறது.

நீட் உட்பட எந்த தேர்வின் தோல்வியையும் விட, எந்த ஏமாற்றத்தையும் விட, உங்கள் வாழ்வு பெரியது.

பள்ளியை தாண்ட முடியாத நபர் தமிழகத்திற்கு ஐந்து முறை முதல்வராகி சாதனை படைத்துள்ளார்.

நீட் தேர்வின் நியாய அநியாயங்களை விவாதிப்பதை விட தற்கொலை தீர்வல்ல என்பது பற்றி ஊடகங்களும் அதிகார மையங்களும் திரும்பத் திரும்ப பேசவேண்டும்.

'Success in stumbling from failure to failure with no loss of enthusiasm' என்ற வின்ஸ்டன் சர்ச்சிலின் வாசகத்தை எல்லா ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்.

ஒரு கனவு, ஒரு தற்கொலை எண்ணம் ஆகியவற்றைத் தாண்டி வந்திருக்கும் எண்ணற்றவர்களின் கதைகளைப் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் திரும்பத் திரும்ப சொல்லுவோம்.

என்றும் அன்புடன்,

அந்திமழை இளங்கோவன்

அக்டோபர், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com